சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இந்து பத்திரிகையின் மூத்த போட்டோகிராபர் கே. வி .சீனிவாசன் (சீனா), திடீர் நெஞ்சுவலி காரணமாக வைகுண்ட பதவி அடைந்தார். அவரது மறைவுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது.
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. அப்போது பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்படும். சொர்க்க வாசல் திறந்தும், முதலில் எம்பெருமான் திருமால் அதன் வழியே எழுந்தருள்வார். தொர்ந்து பக்தர்களும் அந்த வழியே வந்து திருமால் ஆசி பெறுவர். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகர்ச்சியானது, திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108லும் சிறப்பாக நடைபெறுவது உண்டு.
இதன்படி இன்றுவைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னையில் பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் அதிகாலை ‘கோவிலிலி விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்த வேளையில், சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு நிகழ்வை சிறப்பான வகையில் புகைப்படம் எடுக்கும் பணியில், ‘தி ஹிண்டு’ ஆங்கில செய்தித்தாள் நிறுவனத்தின் மூத்த போட்டோகிராபர் கே. வி .சீனிவாசன் என்பவர் ஈடுபட்டிருந்த நிலையில், பணியின் போதே திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் கோவில் வளாகத்திலேயே உயிரிழந்தார்.
மூத்த புகைப்பட கலைஞரான கே. வி .சீனிவாசன் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது மாரடைப்பு காரணமாக வைகுண்ட பதவி அடைந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மறைவுக்கு செய்தித்துறையினரும், அரசியல்கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்ட பதவி அடைந்த மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசனுக்கு பத்திரிகை டாட் காம் ஆன்லைன் செய்தி இணையதளமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.