சென்னை: பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்துக்காக ஜனவரி 13ம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி 14ந்தேதி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக மக்களுக்கு மாநில அரசு பொங்கல் பரிசு அறிவித்து உள்ளது. அதன்படி பச்சரி, சர்ச்சை, முழுக்கரும்பு உடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்த, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிபன்றன.
இந்த நிலையில், ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் வகையில், ஜனவரி 13ம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 13ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டதால் அதனை ஈடுகட்டும் வகையில் ஜனவரி 27ம் தேதி வெள்ளிக்கிழமை நியாய விலைக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.எக்காரணத்தை கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. பொங்கல் தொகுப்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சியர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பச்சரிசி, முழு கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.