கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கூடி நின்று கொடியேற்றத்தை கண்டுகளித்துடன், சிவபெருமானின் ஆசி பெற்று சென்றனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. ஆருத்ரா தரிசனம்விழா 11 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தவிழாவின்போது, தினசரி பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 9-ம் நாள் திருவிழாவான தேரோட்டம் ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது, 10-ம் நாள் திருவிழாவாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 6-ம் தேதி மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளது. அப்பொழுது நடராஜ பெருமான் சிவகாமி சுந்தரி தாயாருடன் நடனம் ஆடிய படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிய உள்ளனர்.
இந்த விழாவின் தொடக்க நாளான இன்று காலை கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பொது தீட்ஷிதர்களின் உத்ஸவ ஆச்சார்யர் சு.ரா.நடராஜ குஞ்சிதபாத தீஷிதர் மார்கழி ஆருத்ரா கொடியேற்ற திருவிழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கொடி மரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட பொது தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க ஆருத்ரா தரிசன கொடியேற்ற நிகழ்வு தொடங்கியது
இதைத்தொடர்து நாளை (29-ந்தேதி) வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது.
நாளை மறுதினம் 30-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெறும். 31-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும்,
புத்தாண்டான, ஜன.1-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெரு வடைச்சான் வீதி உலாவும், 2-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 3-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது. 4-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்கு திரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 5-ந் தேதி தேர்த்திரு விழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
6-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
அதன் பின்பு சொர்ண அபிஷேகம் நடைபெறும் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜனவரி 7-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்ஷிதர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு ஒள்ளது, இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.