சென்னை: அண்ணாமலையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என சென்னை வடபழனி கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக அவ்வப்போது புகார்கள் கூறப்படுகின்றன. கோவில்களில் பூஜை புனஸ்காரங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும், டிக்கெட் விற்பனைகளில் முறைகேடுகள் ஈடுபடுவதும், பக்தர்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்வது போன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஒரு தரப்பினர் கோவில்களை அரசிடம் இருந்து மீட்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் புகார் கூறி வந்தனர். இதையடுத்து, இன்று அங்கு ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கோவிலில், தரிசன டிக்கெட் விற்பனை செய்யும் ரேவதி, தரிசன டிக்கெட் சரி பார்த்து பக்தர்களை அனுப்பும் ஊழியர் சின்னத்தம்பி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அண்ணாமலை, எனது சொத்து பட்டியலை வெளியிடும் அதே நாளில், முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன் என்பது குறித்து கேள்வி எழுபப்பட்டது.
அதறகு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். திமுக லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை நடத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.