டெல்லி: சீனாவை தொடர்ந்து, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் தொற்று பரவல் தடுப்பு பரிசோதனைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை  கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார் . முன்னதாக, இந்தியாவில் கொரோனா ஜீனோம் சோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பி, தொற்று விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சீனா, அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கரோனா வைரஸ் தொற்றை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

அனைத்து கரோனா நோயாளிகளின் மாதிரிகளையும் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். நாள்தோறும் மரபணுப் பரிசோதனை நடத்த வேண்டும். இதற்கு இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பின் (இன்சாகாக்) ஆய்வகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்போதுதான், புதிய வகை கரோனா வைரஸ்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவை பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய சுகாதாரத் துறை வழங்கும்.

இவ்வாறு ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.