சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 1.03 கோடி பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 1.03 கோடி பேர் இணைத்துள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான குருஞ்செய்தியை மின்சார வாரியம், மின் நுகர்வோருக்கு அனுப்பி வருகிறது. அதன்படி, மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு அதற்கு இந்த மாதம் வரை அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று  சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த  அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்வாரியம் மூலம் வரும் வருவாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் கூறியவர்,  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.  தமிழ்நாட்டில் மொத்தமுள்ள  2.66 கோடி நுகர்வோரில்,  இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கூறிய அமைச்சர்,  தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.