ஜெய்ப்பூர்: ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையின் 100வது நாளை பிரபல பாடகியின் இசைக்கச்சேரியுடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி 100வது நாளான வரும் 16ந்தேதி (வெள்ளிக்கிழமை) பாடகி சுனிதி சவுகானின் நேரடி நிகழ்ச்சியுடன் ஒரு கச்சேரியை நடத்த முடிவு செய்துள்ளது என காங். பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் தூரத்துக்கான 150 நாட்கள் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரிலான ஒற்றுமை யாத்திரைக்கான நடைபயணத்தை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை, கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, மத்திய பிரதேசம் கடந்த தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.
கடந்த 3ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திற்கு நுழைந்த ராகுல் அங்கு யாத்திரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், மட்டுமே 17 நாட்களில் சுமார் 500 கி.மீ. யாத்திரை மேற்கொள்கிறார். வரும் 20ந்தேதிவரை ராஜஸ்தானில் யாத்திரை மேற்கொள்ளும் ராகுலின் 100வது நாள் யாத்திரைத நாளை மறுதினம் (16ந்தேதி) ராஜஸ்தான் மாநிலத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
வரும் 16ம் தேதி ஒற்றுமை யாத்திரையின் 100வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, 100-வது நாளான வரும் 16-ம் தேதி ஜெய்ப்பூரில் பாடகி சுனிதி சவுகானின் நேரடி நிகழ்ச்சியுடன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி செய்துள்ளார்.