சென்னை: 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன், அவரது சகோதரர் ஜெகன்,   கீதாஜீவன் கணவர் உள்ளிட்ட 5 பேர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று மற்றொரு அமைச்சரான கீதா ஜீவன் விடுக்கப்பட்டு உள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் தற்போது, மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் கீதா ஜீவன். அவரது தந்தை தூத்துக்குடி பெரியசாமி. இவர் கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தூத்துக்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தார். அந்த காலகட்டத்தில் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2,31,87,000 அளவுக்கு சொத்து சேர்த்ததாக, தி.மு.க ஆட்சிக்குப் பிறகான கடந்த 2002-ல் அ.தி.மு.க ஆட்சியில் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் 6 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த வழக்கில், கடந்த 2003, ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டவராக என்.பெரியசாமி சேர்க்கப்பட்டார். இரண்டாவதாக அவரின் மனைவி எபினேசர், மூன்றாவதாக மூத்த மகன் ராஜா, நான்காவதாக இளைய மகன் ஜெகன் (தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர்), ஐந்தாவதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், ஆறாவதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி, கடந்த 2017, மே 26-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இருப்பினும், அவரைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இதற்கிடையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் கீதா ஜீவன். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார் கீதா ஜீவன். ஆனால், சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான காரணத்தை தெரிவிக்காததாலும், தன்னுடைய வருமானத்தில் சொத்துகளை வாங்கியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யாததைக் காரணம் காட்டியும், அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க இயலாது எனக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று  (14-ம் தேதி) தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் கீதாஜீவனின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 19 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று திடீரென, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன், அவரது சகோதரர் ஜெகன் விடுவிப்பு கீதாஜீவன் கணவர் உள்ளிட்ட 5 பேர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த அதிமுக  ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில்  10ஆண்டுகளுக்கு பிறகு, அமைச்சரை விடுவிப்பு செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று அமைச்சர் கீதாஜீவன் விடுவிக்கப்பட்டுள்ளது நீதித்துறை மீதான நம்பிக்கையை தகர்த்துள்ளது.

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு: 10ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு…