ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் மகள் மிராயா வத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், யாத்திரை யாத்திரையின் போது ராஜஸ்தானில் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆடிய கலைஞர்களுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார்.
2024 நாடாளுமன்ற தேர்தலை பலப்படுத்தும் நோக்கிலும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலம், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் யாத்திரை தற்போது, ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.
தற்போது ராஜஸ்தானின் பூண்டி பகுதியில் இன்று காலை யாத்திரை தொடங்கியது. இன்றைய யாத்திரையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, பிரியங்கா மகள் மிராயா வத்ரா ஆகியோர் கலந்துகொண்டனர். இன்று ராஜஸ்தானில் மகிளா சசக்திகரன் திவாஸ் என்ற பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ராகுல்காந்தி பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இன்றைய யாத்திரையில் பெரும்பாலான பெண்களுடன் கலந்துகொண்டார்.
மேலும், அவரது நடைபயணத்தின்போது, பெண்கள் மற்றும் கலைக்குழுவினர், பாரம்பரிய ராஜஸ்தானி ஆடைகளை அணிந்து நாட்டுப்புற பாடல்களை பாடி ஆடி வரவேற்றனர். அப்போது, அவர்கள் பிரியங்கா காந்தியையும் தங்களுடன் ஆட அழைத்தனர். அதைதொடர்ந்து, அவருக்கு சிறிது நேரம் அவர்களுடன் ஆடி மகிழ்ந்தார்.
இன்றைய யாத்திரையானது, ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் பீபுல்வாடாவில் நிறைவடைகிறது.