சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, சென்னையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
வங்க கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால், சென்னை உள்பட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்கி காணப்பட்டன.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காற்றின்ன் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல், பல இடங்களில் வீடுகளின் மொட்டை மாடிகளில் போடப்பட்டிருந்த இரும்பு கூரைகள் காற்றில் பறந்தன. கழிவறைகளில் போடப்பட்டிருந்த மேற்கூரைகளும் சேதம் அடைந்தன. சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மரங்களும் சாய்ந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணி உள்பட மீட்பு பணிகளில் 30 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார்.
மின் ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் வயரை சரி செய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருவதாகவும், அசோக் நகர், கே.கே.நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளது. கோயம்பேடு மேற்கு மாட வீதியில் இருந்த பழமையான வேப்பமரம் ஒன்று இன்று அதிகாலை திடீரென முறிந்து விழுந்தது. இதில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள் நொறுங்கியது. இதேபோல் மாம்பலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் சேதமடைந்துள்ளன.
திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய ராமாபுரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட 50 தொகுப்பு வீடுகளில் 20 வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மழை தண்ணீர் ஒழுகி வீடு முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசிப்பவர்கள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே மாண்டஸ் புயல் 5 பேரின் உயிரையும் பறித்துள்ளது. சென்னையில் 3 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் இருவரும் பலியாகி இருக்கிறார்கள்.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 1-வது தெருவில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த லட்சுமி (45), அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் (25) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். துரைப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியரான விஜயகுமார் என்பவரும் உயிரிழந்தார்.
தான் பணிபுரிந்து வந்த ஐ.டி. நிறுவனத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த விஜயகுமார் காற்றில் ஆடிக்கொண்டிருந்த 10 அடி உயர ஜன்னலை அடைப்பதற்காக சென்றார். அப்போது ஜன்னல் கண்ணாடி உடைந்து அவரது வயிற்றில் குத்தியது. இரவு நேரம் என்பதால் உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு ஐ.டி. நிறுவனத்தில் ஆள் இல்லாத நிலையில் விஜயகுமார் உயிரிழந்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிரஞ்சன்குமார் வயது22, சுகன்குமார் வயது24. இவர்கள் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைபாக்கம் ஊராட்சி யில் தங்கி தனியார் தொழிற்சாலை யில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது. பல இடங்களில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் அருகே மரம் முறிந்து மின் கம்பி சாலையில் விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் நிரஞ்சன்குமார், சுகன்குமார் இருவரும் மிதித்து விட்டனர். இதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். இவர்கள் இறந்து கிடந்ததை யாரும் இரவு முழுவதும் பார்க்கவில்லை. காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சார வாரியம் முன் கூட்டியே மின்சாரத்தை துண்டித்து இருந்தால் இரண்டு உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.