காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்ற 2வது கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. 5ந்தேதி வாக்குப்பதிவும், 8ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
182 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1-ந் தேதி முடிவடைந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு வரும், 5-ந் தேதி நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளும் முயன்று வருகின்றனர்.. இதனால் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அங்கு நடைபெற்று வந்த அனல்பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து அந்த தொகுதிகளில் தங்கி உள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது
முதல் கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் அங்கு 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து, 5ந்தேதி மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
2வது கட்ட வாக்குப்பதிவு நஅகமதாபாத், வதோதரா, காந்திநகர், உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவானது 8ந்தேதி அன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த 83 தொகுதிகளில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 833 பேர் களத்தில் உள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வரும் 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.