சென்னை: மாநில தலைநகர் சென்னையில் நடைபெறும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு வெளிமாநிலத்தவர்களே காரணம் என காவல்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் 424 வெளிமாநிலத்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்,  என்றும், அவர்களில் 396 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளது.  இதன் காரணமாக சென்னையில் உள்ள வெளிமாநிலத்தவர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டுக்கு வேலைவாய்ப்பை தேடி தினசரி ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு சாரை சாரையாக வந்துகொண்டிருக் கின்றனர். இதில் சிலர் கொலை, கொள்ளை, பாலியல் போன்ற முறைகேடான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சென்னையில், நடைபெற்ற குற்றச்செயல்களில் 424 குற்றச்சம்பவங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் கொலை, கொள்ளை, மோசடி போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில்  396 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களையும் தேடி வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. மேலும், 82 வெளிநாட்டை சேர்ந்தவர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பிறமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, நிறுனவனங்களில் வேலை பார்க்கும் வெளிமாநிலத்தவர்களின் ஆதார் தகவலை சேகரித்து வழங்க வேண்டும் என்றும், கட்டுமான நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் விவரங்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன்  இது தொடர்பாக காவல்துறையில் தகவல் அளிக்கவும் உத்தரவிட்ப்பட்டு உள்ளது.

மேலும், வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும்  வெளி மாநிலத்தவர்கள், மாணாக்கர்கள் போன்றோர் குறித்தும், வீட்டு உரிமையாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.