சென்னை: மாநகர பேருந்து நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதியை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கருடன் இணைந்து பேருந்து ஸ்டிரியங்கை பிடித்து தொடங்கி வைத்தார்.
பேருந்து பயணிகளின் வசதிக்காக சென்னை மாநகர பேருந்து நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி இன்று தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று காலை ந போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று கொடியசைத்து பேருந்துகளை தொடங்கி வைத்தார்.
அதன்படி, முதற்கட்டமாக 150 பஸ்களில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ் தொழில் நுட்பத்தில், நவீன தானியங்கி பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு செயல்படுத்தப்படு கிறது. இதைத்தொடர்ந்து பிராட்வே-தாம்பரம்(21ஜி) பிராட்வே-சைதாப்பேட்டை (E18), பிராட்வே-குன்றத்தூர் (88 கே) ஆகிய பஸ்கள் புறப்பட்டு சென்றன.
அப்போது உதயநிதி ஸ்டாலின், அந்த பஸ்சில் ஏறி அமர்ந்தார். அவருடன் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர் அன்பு ஆபிரகாம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். பேருந்தில் அவர்கள், பாரிமுனை வழியாக தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை சாலையில் விவேகானந்தர் இல்லம் வரை பயணம செய்து அதன்பிறகு இறங்கி கொண்டனர்.
உதயநிதிக்கு பாதுகாவலர்கள் போல அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்பட்டதை கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் முனுமுனுத்தனர்.