சென்னை: வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்பட பல்வேறு பணிகளுக்கான மாநிலம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதைத் தொடர்ந்து, நடப்பு மாதம் ஒன்பதாம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் வாக்குச்சாவடி அலுவலர் வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும் நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே 12 மற்றும் 13ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது . இந்த இரண்டு நாள் முகாமில் 7.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் விடுபட்டவர்களுக்காக இன்று மற்றும் நாளை (26, 27ந்தேதிகள்) ஆகிய இரண்டு தினங்களும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ,திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அறிவித்துள்ளார்.
சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்முள்ள 3,723 வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் வாக்காளர் சிறப்பு மையங்கள் நடக்கின்றன. படிவங்கள், 6, 6ஏ, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.