கத்தார்:
போர்ச்சுகல் – கானா அணிகள் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்றில், நேற்று போர்ச்சுகல் அணி கானா அணியுடன் மோதியது. இதில் போர்ச்சுகல் அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வலம் வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 30வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆனால் ஃபவுல் காரணமாக இது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி சூடு பிடித்தது. 65-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

இந்த போட்டியின்போது, 3 புள்ளி ஒரு மீட்டர் உயரம் குதித்து ஹெட்டிங் செய்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை படைத்தார்.

இதன்மூலம், ஏற்கனவே அவர் 2 புள்ளி ஒன்பது மூன்று மீட்டர் குதித்த சாதனை முறியடிக்கப்பட்டது.

மேலும், 5 உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் 37 வயதான ரொனால்டோ தனதாக்கிக் கொண்டார். மொத்தத்தில், அவர் உலக கோப்பையில் அடித்த 8வது கோல் இதுவாகும்.