சென்னை: சமீப காலமாக சில யுயூப் சேனல்களின் பிராங்க் வீடியோக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, இதுபோன்ற பிராங்க் விடியோக்கள் வெளியிடும் யுடியூப் உரிமையாளர்களை வரவழைத்த போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிராங்க் (Prank) என்று கூறிக்கொண்டு சமீப நாட்களாக பொது இடங்களில் சில யூடியூப் சேனல்கள் மக்களை பயமுறுத்தி வருகின்றன. சில நிறுவனங்களின் விடியோக்கள் எல்லை மீறியும் நடந்துகொண்டுள்ளது. இதுபோன்ற விடியோக்களால் பாதிக்கப்படம் பலர் கடுமையாக நடந்துகொள்ளும் நிலையும் உருவாகி வருகிறது. ஆனால், அதை யூடியூப் சேனல்கள் அதை கண்டுகொள்வதிலை. இதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் கவலைப்படுவது இல்லை. இதனால், பல பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் புகார்கள் எழுந்துள்ளன.
பிராங்க் வீடியோ எடுத்தல் என்ற விதத்தில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்ற இளைஞர் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும், 5 யூடியூப் சேனல்கள் மீது, மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி, பல்வேறு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது வீடியோவின் தன்மைக்கு ஏற்ப கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், புகார் தெரிவிக்கப்பட்ட நபர்களின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிற சிறப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது” என காவல்துறை தெரிவித்துள்ளது.