சென்னை: 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2016ம் அண்டு அமலுக்கு வந்தது. இதனால் பல லட்சம் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக அரசு, 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி. என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். ஒரு நுகர்வோர் 3 – 5 வீடுகள் வைத்திருந்தாலும், ஆதார் எண்ணை இணைக்கும் போது மானியம் தொடரும் என்று கூறியவர், யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் பெறவே ஆதார் இணைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்.
மேலும், எல்லா இடங்களிலும் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாக கூறியவர், அடுத்த 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்ததுடன், பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.