சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி “வ.உ.சி. 150 பிறந்த ஆண்டு” சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளியிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150 பிறந்த ஆண்டினை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட “வ.உ.சி. 150 பிறந்த ஆண்டு சிறப்பு மலர்” ஐ வெளியிட்டார். தொடர்ந்து, வ.உ.சி. எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள வ.உ.சி. யின் 150 ஆவது பிறந்த ஆண்டு சிறப்பு இணையப்பக்கத்தை தொடங்கி வைத்தார்.
சுதந்திர போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின். வ.உ.சி.யின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அரசு சார்பில் நடத்தப்படும் என்றும், அதையொட்டி, காந்தி மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியின் மார்பளவு சிலை, ஆண்டு விருது, தெருவுக்கு பெயர் சூட்டுதல், சிலை மற்றும் வெளியிடப்படும் அவரது எழுத்துக்கள் உள்ளிட்ட பிற நிகழ்வுகள் கொண்டாட்டங்களில் அடங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டமன்ற பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று அவரது நினைவுநாளையொட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் உருவப்படம் வைக்கப்பட்டு அலங்காரிக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருவபடத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் சார்பிலும் அவரது திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் சுவாமிநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று வ.உ.சி-யின் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார் அவர்களின் 150 பிறந்த ஆண்டினை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட “வ.உ.சி. 150 பிறந்த ஆண்டு சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். வ.உ.சி. அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பு இணையப்பக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.