சென்னை: திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று கைவிரித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 133வது பிறந்தநாள் முன்னிட்டு சென்னை கத்திபாரா சந்திப்பில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஜவஹர்லால் நேரு திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர், மிஸ்டர் கிளின் என அழைக்கப்படும் ராஜீவ்காந்தி, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனால், அவர்கள் சுமார் 30 ஆண்டுகளை கடந்தும் சிறையில் வாடிய நிலையில், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அதிமுக, திமுக அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக, தற்போது உச்சநீதிமன்றம் கொலையாளிகளை விடுதலை செய்துள்ளது. இந்த கொலையாளிகளில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்பதில் இருவேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
ஒருநாட்டின் உயர்ந்த பதவியில் இருபவர்கள் படுபயங்கரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளது, இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கி இருப்பதாகவும், இதன்மூலம் நமது நாட்டின் சட்டமும், தண்டனைகளும் கேள்விக்குறியாகி வருவதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ராஜீவ்கொலை கைதிகள் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து தமிழக காங்கிரசும் தனது கண்டனத்தை பதிவு செய்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக – காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என தனது இயலாமையை தெரிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு என்று கூறியிவர், 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான தமிழக கைதிகள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். பலர்மீது வழக்குப் பதிவு கூட செய்யாமல் விசாரணைக்காக சென்ற பலர் சிறையில் வாடி வருகிறார்கள், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள பல இஸ்லாமியர்கள் சிறையில் இருக்கிறார்கள், அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுகவுக்கும் எங்களுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடு உண்டு. ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை என்பது தவறு என்றவர், திமுக – காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. எங்களுக்கும் திமுகவுக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருக்கிறது என்றாலும், மதசார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் இணைந்துள்ளோம் என கூறினார்.