சென்னை: வியாசர்பாடி பாலம் உள்பட சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இன்றை காலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை கொட்டி வருகிறது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், பெய்துவரும் கனமழை காரணமாக, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும் சூரப்பட்டு வினாயகபுரம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடடினயாக தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தின. இதனால் சாலையில் தேங்கிய தண்ணீர் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக வடசென்னையின் முக்கிய பாலமான வியாசர்பாடி சுரங்க பாதையில் தேங்கும் தண்ணீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு, போக்குவரத்து தடை படாமல் கண்காணிக்கப்பட்டது. அதுபோல சென்னையில் உள்ள முக்கிய 16 சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்காதவாறு கண்காணிக்கப்பட்டு, தேங்கும் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியாவுடன் சென்னையில் முக்கிய பகுதிகளில் பார்வையிட்டு மழைநீர் தேங்குவது தொடர்பாக ஆய்வு செய்தார். இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட அண்ணா சாலை மற்றும் டேம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள மழைநீர் வடிகால் இணைப்பில் மழைநீர் வெளியேறுவதை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் பருவமழை கட்டுப்பாட்டு அறையினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, அமைச்சருடன் மேயர் பிரியா, துணை மேயர் மகேஸ்கு மார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,இ.ஆ.ப, அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள் உட்பட பலர் இருந்தனர்.
இந்த நிலையில்,சென்னை மாநகராட்சி கண்காணிப்பில் உள்ள வியாசர்பாடி சுரங்க பாலம் உள்பட 16 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை – அனைத்து சுரங்கப்பாதைகளும் தெளிவாக உள்ளன என்பதை சுட்டிக்காட்டி, அதற்கான புகைப்படத்தை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.