திருவாரூரிலிருந்து 21.கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 81 வது ஆலயம். இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. பிரமனால் பூசிக்கப் பெற்றதால் அயவந்தி என்னும் பெயர் ஏற்பட்டது என்பர். தற்போது இவ்வூர் சீயாத்தமங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

 

இறைவரின் திருப்பெயர் அயவந்தீசுவரர். இறைவியின் பெயர் மலர்க்கண்ணம்மை. இது திருநீலநக்க நாயனார். அவதரித்த திருப்பதி. “நிறையினார் நீலநக்கன் நெடுமாநகரென்று தொண்டர் அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி” என்னும் தேவாரப் பகுதியாலும், சேக்கிழார் பெரியபுராணத்தாலும் இதை அறியலாம். இந்நாயனார் தம் மனைவியாருடன் இறைவனை வழிபடத் திருக்கோயிலுக்குச் சென்றார். அதுபொழுது ஒரு சிலந்திப்பூச்சி சிவலிங்கத்தின்மீது விழுந்தது. மனைவியார் அன்பு மேலீட்டினால் அப்பூச்சியை வாயால் ஊதி அகற்றினார். இதைப்பார்த்த நாயனார் தமது மனைவியாரின் இச் செயல் தகாதது என்று எண்ணி அவரைத் துறந்தனர். மனைவியாரும் வீடு செல்லாது கோயிலில் இருந்தார். அன்று இரவு நாயனார் தூங்குகையில் சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி, அவர் மனைவியார் ஊதின இடந்தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புள் (கொப்புளம்) இருப்பதைக் காட்டி அவ்வம்மையாருடைய அன்பின் பெருக்கை வெளிப்படுத்தி அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமைவாய்ந்த பதி.


திருஞான சம்பந்தப்பெருந்தகையார் இப்பதிக்கு எழுந்தருளியபோது திருநீல நக்கர் அவரை வரவேற்று, அவருடைய நட்பைப் பெற்றதும் இப் பதியில்தான். சம்பந்தப் பெருந்தகையாரும் “அடிகள் நக்கன்பரவ அயவந்தி அமர்ந்தவனே” எனத் திருநீலநக்கரைப் பாராட்டியிருப்பது போற்றற்குரியது. இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.