நியூயார்க்: டிவிட்டரின் வெடிஃபைடு பயனர்களுக்கான ‘புளூ டிக்’ வசதிக்கு இனி மாதம் 8டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என டிவிட்டர் அதிபர் எலன் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிவிட்டரை முழுமையாக கைவசப்படுத்தி உள்ள புதிய உரிமையாளர் எலான் மஸ்க், டிவிட்டரில் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்தியரான பராக் அகர்வால் உள்பட சிலரை பணிநீக்கம் செய்துள்ளார். மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில், டிவிட்டர் பயனர்களின் அதிகாரப்பூர்வ அடையாளங்களை உறுதிப்படுத்தும் புளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிக்கும் வழிமுறை குறித்து ஆராயுமாறு தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, மாதம் ரூ.9 டாலர் கட்டணம் என அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார் மஸ்க்.
இதுதொடர்பாக எலன் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், “பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி புளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் & தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் இருக்கும். இந்த கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.