கன்னடத்தின் பெருமைக்குரிய நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று (நவம்பர் 1) ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் புகழ்பெற்ற மெதடிஸ்ட் தேவாலய படிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார்.
ரஜினிகாந்த் தவிர ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி-யிடம் விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய ரஜினிகாந்த் “67வது கன்னட ராஜ்யோத்சவ் தினத்தில், ‘முதல்வர் முன்னிலையில் 7 கோடி கன்னட மக்களுக்கு இங்கிருந்து எனது ராஜ்யோத்சவ் வாழ்த்துக்கள்” என்று கன்னடத்தில் தொடங்கினார்.
தொடர்ந்து கன்னடத்திலேயே பேசிய அவர், “ஜாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று ராஜராஜேஸ்வரியிடமும், அல்லாவையும், ஏசுவையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
மேலும், “எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., ராஜ்குமார் ஆகியோர் 50 ஆண்டுகளில் செய்த சாதனையை புனித் ராஜ்குமார் 20 ஆண்டில் நிகழ்த்தியதாக” புகழாரம் சூட்டினார்.
ரசிகர்களால் அப்பு என்று அன்போடு அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் “கடவுளின் குழந்தை சிலகாலம் நம்முடன் இருந்து தனது திறமையை வெளிப்படுத்தி மீண்டும் கடவுளிடம் சென்று விட்டது” என்று உருக்கமாக பேசி அவரது ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
“தவிர இங்கு வந்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் ரசிக பெருமக்களுக்கு நன்றி” என்று இறுதியில் தமிழில் தனது உரையை முடித்தார்.
மழை காரணமாக நிகழ்ச்சி சில மணி நேரங்களே நடைபெற்ற போதும் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் வரை கொட்டும் மழையிலும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.