டெல்லி: மோா்பி தொங்கு பாலம் விபத்தில் 141பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை வரும் 15ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள நூற்றண்டை கடந்த மோர்பி தொங்கு பாலம் பழுது பார்க்கப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
100 பேர் வரை மட்டுமே அந்த பாலத்தின்மீது ஏறி, பார்வையிட அனுமதிக்கப்படும் நிலையில், சுமார் 500 பேர் அந்த பாலத்தில் சென்றதால், பாரம் தாங்காமல் அந்த பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாலத்தின்மீது இருந்த பொதுமக்கள் கீழேஉள்ள ஆற்றில் விழுந்தனர். இதனால் பலர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். இந்த விபத்தில் 141 போ் உயிரிழந்தனா். இந்த விபத்து தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோர்பி பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலங்களை தணிக்கை செய்யக் கோரியும் வழக்கறிஞர் விஷால் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது