தருமபுரி:  காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும்  மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, காவிரியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  இதனால் சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கம், அங்குள்ள அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் தீபாவளி விடுமுறைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று தண்ணீர் வரத்து குறைந்ததால்,  இன்று முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒக்கேனக்கலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கும், பரிசல் ஓட்டிகள் பரிசல்கள் இயக்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  பரிசல்களை இயக்கும் பரிசல் ஓட்டிகள், பரிசல்களில் பயணிகளை ஏற்றி செல்லும் போது பாதுகாப்பு கவச உடை அணிவித்து பாதுகாப்பாக பரிசல்களை இயக்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.