சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், தடுப்புகள் இல்லாத இடங்கள் பற்றி 1913 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என தெரிவித்து உள்ளது.

சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் காவல்வாய்கள், மெட்ரோ ரயில் பணிகள் என எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு, பெரும்பாலான சாலைகள் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் உள்ளதுடன், மழை நேரத்தில், மழைநீர் தேங்குவதால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துக்களும் ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு

கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில், உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த 24 வயதான முத்துகிருஷ்ணன், காசி தியேட்டர் அருகே தோண்டப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில்  தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரும் சர்ச்சையானது.

இநத் நிலையில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த பருவமழையின் போது மழைநீர் தேங்கிய இடங்கள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சி, நெடுஞ் சாலைத் ‘துறையின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடங்கள் மற்றும் சேவை துறைகளான தமிழ் நாடு மின்சார வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி மற்றும் குழாய் பதிப்பு பணிகள் தொடர்பான இடங்களிலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்க ஏற்கனவே அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் இடங்களில் தடுப்புகள் அமைப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அதனை முறையாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சில இடங்களில் தடுப்புகள் அமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சியின் சார்பில் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படாத இடங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவ்விடங்களிலும் உடனடியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது சம்மந்தப்பட்ட பொறியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது தடுப்புகளுக்கு இடையே கடந்து செல்லாமல் முறையாக தடுப்புகளை சுற்றி கடந்து செல்லவும், பாதுகாப்பாக செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து பொது மக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.