தூத்துக்குடி: திருச்சந்செந்தூரில் கந்த சஷ்டி விழாவையொட்டி, சஷ்டிநாயகர் ஸ்ரீஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கத் தேரில் எழுந்தருளி கிரி பிரதட்சணம் வந்தார். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் எம்பெருமானை தரிசித்து ஆசி பெற்றனர்.
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் காரணமாக தினசரி சிறப்பு அபிசேகம், வெள்ளிப்பல்லக்கில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கந்த சஷ்டி விழா எளிமையாக நடைபெற்ற நிலையில், இந்த வருடம் மீண்டும் களைகட்டி உள்ளது. கந்த சஷ்டி விழா தொடக்க நாளான நேற்று பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. கோயிலில் உள்பிரகாரத்தில் ஜெயந்திநாதருக்கு பூஜை தொடங்கி, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 12.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்று, ஜெயந்தி நாதர் சண்முக விலாஷ் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
சூரிய கிரகணம் முடிந்ததும், மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி-அம்பாள்கள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் இரவு தங்கத்தேரில் அம்பாளுடன் கிரி பிரதட்சனம் செய்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜெயந்தி நாதரை தரிசித்து அருள் பெற்றனர்.