சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் தாமரையாள் கேள்வன் திருக்கோயில், அமைந்துள்ளது.
கவுரவர்களிடம் நாடிழந்து யாத்திரை மேற்கொண்ட அர்ஜுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்த போது அங்கிருந்த புரசங்காடு எனும் வனப்பகுதியினை அடைந்தார். வனப்பகுதியில் தாகம் எழ, நீர் தேடிச் சென்ற போது அகத்தியர் ஆசிரமம் சேர்ந்து, அவரிடம் தாகம் தீர கமண்டலத்திலிருந்து நீரைப்பருக அளிக்க வேண்ட, அகத்தியரும் தந்தார்.
ஆனால் அர்சுனனால் அருந்த இயலாதபடி நீர் மறையவே வருந்தி காரணம் வேண்ட, அகத்தியரும் ஞானதிருஷ்டி மூலம் காரணத்தைக் கண்டு தெரிவித்தார். பல்வேறு சோதனையிலும் காத்த கண்ணனை நினையாது என்னிடம் நீர் கேட்டது பொறுக்காததால் கண்ணன் செய்த லீலை இது என்று கூற, அர்சுனன், கண்ணனை நினைத்து வேண்ட, அங்கு தரிசனம் தந்த கண்ணன், அர்சுனனின் கத்தியால் பூமியை கீறச்சொல்ல, அதிலிருந்து நீர் வந்தது.
அத்தீர்த்த நீரைப் பருகி தாகம் தீர்ந்தான் அர்சுனன். அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே கண்ணன் தங்கிவிட்ட தலம் பார்த்தன்பள்ளி என்றாயிற்று. ஆடி அமாவாசை தினத்தில் பூம்புகார் காவிரி சங்கமத்திற்கு எழுந்தருளச் செல்லும் போது அவ்விழாவை சோழ மன்னர்களே முன்னிற்று தீர்த்தவாரி உற்சவத்தை சிறப்பாக நடத்தியது பற்றிய குறிப்பு அடையாறு தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) வெளியிட்டுள்ள ’சங்க கால வரலாறு’ நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.