கடந்த மாதம் 340 ரூபாய் விற்ற ஒரு கிலோ நல்லெண்ணய் இந்த மாதம் 377 ரூபாயாக அதிகரித்துள்ளது ஆகஸ்ட் மாதம் இதே எண்ணெய் ஒரு கிலோ ரூபாய் 325 க்கு விற்றது இந்த அதிரடி விலையேற்றம் சாமானியர்களின் இதயத்தை கனக்க வைத்திருக்கிறது.
அரிசி பருப்பு முதல் மின்சார கட்டணம் வரை அனைத்தும் விலை ஏற்றம் பெற்றுள்ளது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத தீபாவளி தமாக்கா இந்த ஆண்டு மின் கட்டண உயர்வால் கிடைத்திருக்கிறது. தீபாவளி பலகாரம் செய்ய தேவையான பொருட்களின் அரவை கூலி உயர்த்தப்பட்டிருப்பது மாவு அரைக்கச் செல்லும் குடும்பத்தலைவிகளுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
சிலிண்டர் விலை உயர்வு என்ற புளித்துப்போன ஒன்றைப்பற்றியே கவலைப்படும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் குடும்பத்தலைவிகள் தங்கள் அன்றாட வீட்டு செலவு உயர்ந்து வருவது கண்டு பொருமிக்கொண்டிருக்கின்றனர்.
மந்திரி பிரதானிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட்டத்தை காட்ட மட்டும் பயன்படும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் கூட விலைவாசி உயர்வு மற்றும் குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்ற நிறைவேற்றப்படாத வாக்குறுதி ஆகியவற்றால் பொரிந்து தள்ளுகின்றனர்.
இட்லி, தோசைக்கான ஈரமாவு விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளைத் தாண்டி பேச்சிலர்களையும் கப்சிப் என பேச்சு மூச்சு இல்லாமல் செய்துள்ளது.
தீபாவளிக்கு துணி வாங்க வழக்கத்தை விட குறைவாகவே குவிந்த கூட்டம் கூட தாங்கள் வழக்கமாக வாங்கும் உள்ளாடை கூட பத்து சதம் விலைவாசி உயர்ந்திருப்பதாக முனுமுனுக்கின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை தாண்டி மின் கட்டண உயர்வால் பணியிடங்களில் லிப்ட் முதல் அனைத்து மின்சார உபகரணங்களின் பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் மட்டுமன்றி வேலைக்கு செல்லும் ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாமானியர்களின் வாலட்டுகளில் பணம் அதிகரிக்கிறதோ இல்லையோ அவர்களின் கார்ட்டுகளில் உள்ள பொருட்களின் விலைவாசி மட்டும் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கும் நிலையில் பண்டிகையின் பெயரில் அரசு நிறுவனங்களும் இவர்களை டார்கெட் செய்து வியாபாரத்தில் இறங்கி இருப்பது வேதனையளிக்கிறது.