உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே இளைஞர் ஒருவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாக கூறி சாதுக்கள் பூஜை நடத்திவந்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த இடத்திற்கு வந்த போலீசார் மூங்கில் கம்புகள் மீது பாலீதீன் பைகளை போட்டு அதன்மீது களிமண்ணால் மூடி இருந்த குழியை திறந்து பார்த்தனர்.
அந்த குழிக்குள் இருந்து இளைஞர் ஒருவர் போலீசாரால் உயிருடன் மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஷுபம் என்பவர் தனது தாயார் மறைவுக்குப் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக ஊருக்கு வெளியே குடிசை போட்டு காளி வழிபாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடவுள் வழிபாட்டில் மிகுந்த நாட்டம் கொண்ட அவரிடம் நவராத்திரியின் போது ஜீவசமாதி அடைபவர்கள் முக்தி பெறுவார்கள் என்று சில சாதுக்கள் கூறியுள்ளனர்.
நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் அன்ன ஆகாரமின்றி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்கும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர் சாதுக்களின் இந்த பேச்சை நம்பி முக்தி அடைய குழிக்குள் இறங்கி இருக்கிறார்.
https://twitter.com/Benarasiyaa/status/1574673603521810432
இந்த நிலையில், போலீசாருக்கு இது குறித்து தகவல் கிடைக்கவே சரியான நேரத்தில் வந்து அந்த இளைஞரை உயிருடன் மீட்டதுடன் சாதுக்கள், இளைஞரின் உறவினர்கள் மற்றும் அந்த இளைஞர் என ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் இதே உன்னாவ் மாவட்டத்தில் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் சாமி சிலைகளை வாங்கிய ஒரு சாமியார் அதை தனது வயலில் புதைத்து வைத்துவிட்டு பின்பு பூமியில் இருந்து கிடைத்ததாக நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.