சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் என தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த, தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டு, வழக்கு பதியப்பட்டது. இதற்கிடையில், செந்தில்பாலாஜி, திமுகவுக்கு மாறியதும், அவர்மீதான வழக்குகள் ரத்து செய்யப் பட்டன. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
அதன்படி, தற்போதை அமைச்சர் செந்தில்பாலாஜி அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்று தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட 3 வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வழக்குகளின் இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
ஆளுங்கட்சி அமைச்சருக்கு எதிராக மாநிலத்தை ஆளும் முதலமைச்சரின் கீழ் உள்ள காவல்துறை விசாரணை நடத்தும் என்பது கேலிக்குறியதாக உள்ளது. விசாரணையை முறையாக எதிர்கொள்ள வேண்டுமானால், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜி விலக வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.