ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்-கை சேர்ந்த மிதிலேஷ் மேத்தா என்ற விவசாயி வாங்கிய டிராக்டர்-க்கான கடனை திருப்பி செலுத்தாதல் வசூலுக்கு வந்த தனியார் ஏஜெண்டுகள் அவரது மகள் மோனிகா குமாரி மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ததாக வெளியான சம்பவம் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் 2018 ம் ஆண்டு மாதம் ரூ. 14,300 தவணையில் டிராக்டர் வாங்கிய மிதிலேஷ் மேத்தா 38 மாதங்கள் தவணை செலுத்தி முடித்துள்ளார்.

கொரோனா காரணமாக இரண்டாவது முடை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது தவணை வசூலிக்க முகவர்கள் யாரும் வராத நிலையில், 6 மாத தவணை தொகை ரூ. 85,800 நிலுவையில் இருந்துள்ளது.

இதனை செலுத்துமாறு மஹிந்திரா பைனான்ஸ் முகவர்கள் கடந்த சில மாதங்களாக அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து வட்டி ரூ. 34,200 சேர்த்து 1.2 லட்ச ரூபாயை கட்டியுள்ளார்.

இருந்தபோதும், மேலும் ரூ. 10,000 செலுத்த வேண்டும் என்று மீண்டும் தொந்தரவு செய்த நிலையில், டிராக்டரை ஜப்தி செய்யவந்த முகவர்களிடம் மிதிலேஷ் மேத்தா-வின் மகள் மோனிகா குமாரி விளக்கம் கேட்டுள்ளார்.

மேலும், ஜப்தி செய்வதற்கு முன் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலை தருமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து தனது டிராக்டரை எடுத்துச் செல்லமுடியாத படி தனது பைக்கை டிராக்டர் முன்பு நிறுத்தியிருக்கிறார் மிதிலேஷ் மேத்தா.

இந்த களேபரங்களுக்கு இடையே உங்களுக்கு பட்டியல் வேண்டுமா ? என்று எகத்தாளமாக கேட்டுக்கொண்டே டிராக்டரை முகவர்கள் எடுத்தபோது டிராக்டர் இரண்டு மாத கர்ப்பிணியான 22 வயது மோனிகா குமாரி மீது ஏறியது.

இந்த சம்பவத்தில் மோனிகா குமாரி உயிரிழந்தார். இதனை அடுத்து காவல்துறையில் முகவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அதிகாரிகள் இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக தேடப்படும் நபர்கள் தலைமறைவான நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் வாகனம் ஏற்றியதால் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.