இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அகத்தீஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்கினார்.

நீட் தேர்வால் மரணமடைந்த அரியலூர் அனிதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியை இன்று காலை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மனு அளித்தனர், தவிர வழியெங்கும் பலரும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு ராகுலிடம் மனு அளித்தனர்.

மேலும், வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துனர்.

வழியில் தொண்டர்கள் வாங்கிக் கொடுத்த இளநீரை பருகினார்.

ராகுல் காந்தியுடன் மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் திரளாக பங்கேற்ற இந்த பாதயாத்திரை இன்று காலை 7 மணிக்கு துவங்கியது கொட்டாரம் வழியாக சுசீந்திரம் சென்றடையும் இவர்கள் மாலையில் மீண்டும் தங்கள் பயணத்தை துவங்க உள்ளனர்.

118 பேர் கொண்ட முக்கிய குழுவுடன் காஷ்மீர் வரை செல்ல இருக்கும் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் வரும் 10 தேதி வரை பயணிக்கிறார்.

மாலை சுசீந்திரத்தில் துவங்கி நாகர்கோவில் வரை செல்லும் இவர்கள் இரண்டாவது நாள் யாத்திரையின் முடிவில் அங்குள்ள ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த யாத்திரை இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

 

 

இந்திய ஒற்றுமை பயணம் திருப்புமுனையாக அமையும்… காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் : சோனியா காந்தி