சென்னை: சென்னையில் ஆங்காங்கே அமைந்துள்ள பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னை நகரில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைந்துள்ளது. குறிப்பாக குடிசை பகுதிகளில் அதிக அளவிலான கழிப்பிடங்கள் உள்ளன. இதில் 100க்கும் மேற்பட்ட கழிப்பிடங்களை பராமரிக்க ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. சில கழிப்பிடங்கள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. அந்த கழிப்பிடங்களை பொதுமக்கள், இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோல மெரீனாவில், உழைப்பாளர் சிலை அருகிலும், மெரீனா நீச்சல் குளம் அருகிலும் பொதுக்கழிப்பிட உள்ளது.
இதுபோன்ற பொதுக்கழிப்பிடங்களில், அந்த பகுதிகளைச்சேர்ந்த அரசியல் கட்சியினர், கவுன்சிலர்கள் ஆட்களை வைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டலத்தில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலித்த 2 நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இராயபுரம் மண்டலம். வார்டு 59க்குட்பட்ட பிராட்வே பேருந்து நிலைய வளாகம் மற்றும் பிராட்வே பேருந்து நிலையம் எதிரில் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்த 2 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது காவல்துறையில் புகார் பதியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது