சென்னை: சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகதுறை 2006ன் படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள், உணவு வகைகள் விற்பனை செய்வதற்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும்.சில்லறை விற்பனையாளருக்கு உரிமக் கட்டணமாக ஆண்டுக்கு ₹2,000 ஆயிரம் உரிமம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல தள்ளுவண்டிகள் ரூ.100 செலுத்தி பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது . அத்துடன், சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் அதற்குரிய பெடிட்டிகளில் பாதுகாப்பாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும், என்று விதி உள்ளது. ஆனால் தள்ளுவண்டி கடை வியாபாரிகள் அதனை பின்பற்றுவதில்லை சாலைகளில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் மாசு படிந்த புழுதிக்காற்று தள்ளுவண்டி கடைகளில் உள்ள உணவுகள் மீது படிந்து அசுத்தமாகிறது. இதனை வாங்கி உண்ணும் பொதுமக்களுக்கு வயிற்றுபோக்கு, ஒவ்வாமை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
தள்ளுவண்டி கடைகள் மூலமாக தரமான உணவுகள் விற்கப்படுவதை உறுதிசெய்ய உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கையை முறைபடுத்தி உணவுகள் வழங்க உரிமம் பெற கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களை தள்ளுவண்டி கடை மற்றும் தெருவில் கூவி விற்பனை செய்பவர்கள் 100 ரூபாய் செலுத்தி பதிவு சான்றிதழ் பெற வேண்டுமென்ற நடைமுறை அமலில் உள்ளது. தெருவில் விற்பவர்கள் முதல் நட்சத்திர விடுதி வரை உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் என்பது மிக முக்கியம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில் சாலை ஓரத்தில் தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திடவும், இத்திட்டத்தினை மிதிஆண்டிலேயே தொடர்ந்திட உரிய ஆணை வழங்குமாறு தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சாலையோர தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தனது அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு மண்டல வார்டு அளவில் நடைபெறும் போது ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இடப்பற்றாக்குறை உள்ள போது மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அருகில் விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும், கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது அரசாணையில் கூறியுள்ளது.