டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், எழுதி உள்ள 5 பக்க கடிதத்தில், ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
“கனத்த இதயத்துடன்” ராஜினாமா செய்கிறேன் என்றும், ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தொடங்குவதற்கு முன், தலைமை ‘காங்கிரஸ் ஜோடோ யாத்திரை’யை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அகில இந்திய அளவில் காங்கிரஸில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் மத்திய அமைச்சர் பதவியையும் வகித்தவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகார குழு உறுப்பினராகவும் உள்ளார். முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வரும், மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத், கட்சி தலைமைமீதான அதிருப்தியால், கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் ராஜினாமா செய்வதாக, கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
சமீபத்தில் அவருக்கு நான் ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த குலாம் நபி ஆசாத் இன்றுதிடீரென கட்சியில் இருந்து விலகியது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கட்சி தலைமைமீதான அதிருப்தியில் கடந்த 2020ம் ஆண்டு ஜி 23 என்ற காங்கிரஸ் அதிருப்தி குழுவினரை வழிநடத்தி வந்தார். நிரந்தர முழு நேர தலைமை கட்சிக்குத் தேவை என்று வலியுறுத்தியது. இதையடுத்து கட்சி தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், அவருக்கு காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இது மேலும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அதை ஏற்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியைக் கூட உதறிவிட்டு கட்சியில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
தனது ராஜினாமா குறித்து கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு குலாம் நபி ஆசாத் விரிவான கடிதம் எழுதி உள்ளார். அதில், “கனத்த இதயத்துடன்” ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார். ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தொடங்குவதற்கு முன், தலைமை ‘காங்கிரஸ் ஜோடோ யாத்திரை’யை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் படுதோல்வியைச் சந்தித்து விட்டன என குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து மீள முடியாத நிலைக்கு கட்சி தள்ளப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் பாஜகவிடமும், மாநில அளவில் மாநில கட்சிகளிடமும் காங்கிரஸ் தனது இருப்பிடத்தை இழந்து வருகிறது. இதற்கு எல்லாவற்றுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் தலைமையே காரணம்.
குறிப்பாக 2013-க்கு பிறகு ராகுல் காந்தி பொறுப் பேற்றதும் கட்சியின் நிலைமை மாற தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் பொறுப்புணர்வற்ற தலைமையால் காங்கிரஸ் கட்சி இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் என்பது முழுக்க முழுக்க கேலிக்கூத்தான விஷயம் என்றும் கட்சியில் பூத் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவருமே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையால் தான் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவர்களை தொண்டர்கள் தேர்வு செய்வது இல்லை.
அந்தவகையில் கட்சிக்குள் நடக்கும் மிகப் பெரும் மோசடிக்கு காங்கிரஸ் தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் மோசமான நிலைமைக்கு வருவதற்காகவா முன்பிருந்த தலைவர்கள் பாடுபட்டார்கள்? என வேதனை தெரிவித்துள்ள அவர், இதனை இன்றைய காங்கிரஸ் தலைமை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி காங்கிரஸில் கலந்தாலோசனை முறையை முற்றிலும் அழித்துவிட்டார் என்றும், அவரின் குழந்தைத்தனமான நடவடிக்கையாலே 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது அவரது உதவியாளராலேயே எடுக்கப்படுகிறது எனவும் தெரிவித்து உள்ளர்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி இருக்கிறார். மற்றபடி எல்லா முடிவுகளையும் ராகுல்காந்தியோ இல்லை அவரது காரியதரிசிகளோ ஏன் அவரது பாதுகாவலர்களோ தான் எடுக்கிறார்கள் என குற்றம் சுமத்தி உள்ளார்.
காஷ்மீர் மாநில பிரசார குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பின்னர் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறேன். என்னைப்போல் உருவ பொம்மை செய்து இறுதி ஊர்வலம் நடத்தினர். இதன் பின்னணியில் இருந்தவர்கள் ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் தான் என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த பரபரப்பான சூழலில் இமாச்சல் காங்கிரஸ் வழிகாட்டு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா சோனியா காந்திக்கு, கடிதம் எழுதியிருந்தார். அதில், தேர்தலை முன்னிட்டு கட்சி எடுத்த முடிவுகள் குறித்து என்னுடன் ஆலோசிக்கவில்லை. எனது சுயகவுரவத்தை விட்டு கொடுக்க முடியாது. ஆனால் இமாச்சலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்வேன் என ஆனந்த் சர்மா தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் என அடுத்தடுத்து தலைவர்கள் விலகுவது வரவிருக்கு இமாச்சல சட்டப்பேரவை தேர்தலை, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலில் மட்டுமல்ல 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.