டெல்லி:  ஆகஸ்ட் 28 ந்தேதி அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் குறித்து முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 28ம் தேதி மாலை 3:30 மணிக்கு சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் காணொளி காட்சி வாயலிக நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை முழுமையான தலைவர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அதுகுறித்து விவாதித்து இறுதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ்  கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி,  கடந்த 2019 மக்களவை தேர்தலை தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பு ஏற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதை அடுத்து, அந்த பதவியில் அவரை மீண்டும் அமர வைக்க கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். அவரை தலைவராக்க நடைபெற்ற அனைத்து முயற்சிகளும்  தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

அதுபோல தற்போது இடைக்கால தலைவராக உள்ள  சோனியா காந்தியும் தனது உடல்நிலை காரணமாக தலைவர் பதவிக்கு திரும்ப முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் பல தலைவர்கள்,  நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தலைவர் பதவியை அளிக்க வேண்டும் விரும்புகின்றனர், அதே சமயத்தில் மூத்த நிர்வாகிகள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, புதிய தலைவராக பிரியங்கா காந்தியை ஒரு தரப்பு முன்னிலைப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் கட்சி தலைவர் பதவியை பிடிக்க மூத்த தலைவர்களாக அசோக் கெலாட், ப.சிதம்பரம் உள்பட பலர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் வரும் 28ந்தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது. இதையடுத்து கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.