சென்னை: பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு பருத்தி நூல் வாங்க டெண்டர் தமிழகஅரசு வெளியிட்டது. இதனால், இலவச வேட்டி சேலை திட்டம் தொடருமான என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த கால அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி வரும் திமுக அரசு, பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்தையும் ஒழிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. “தமிழகத்தில் 1983 முதல் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஏழைகள், முதியோர், விதவை, ஆதரவற்றோர் என சுமார் 1கோடியே 80லட்சம் பேருக்கு வேட்டியும், சுமார் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு சேலையும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், இலவச வேட்டி சேலை திட்டத்தை தொடர வேண்டும் என நெசவாளர்களும், பொதுமக்கள், அரசியல் கட்சிகளும் தமிழக அரசை வலியுறுத்தி வந்தன.
இதுதொடர்பாக, இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 158 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இலவச வேட்டி, சேலைத் திட்டத்திற்கான நூல் கொள்முதலுக்கு தமிழக அரசின் கைத்தறித்துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க தமிழக அரசு டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இதையடுத்து, பொங்கல் இலவச வேட்டி சேலைகள் தயாரிக்க, கைத்தறி, விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியை மேற்கொள்ள விரைவில் ஆணைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.