சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து, உடன் பயின்ற இரு மாணவிகள் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். மூடப்பட்ட அறையில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. மேலும், மாணவி யின் மரணத்துக்கு காரணம், பள்ளி நிர்வாகம் என ஸ்ரீமதியின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பள்ளி மாணவி தொடர்பாக பல்வேறு வீடியோக்களும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளி விடுதியில் தங்கிப்படித்த அவரது 2 தோழிகள் காவல்துறையினரிடம் விரிவாக பல தகவல்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் அளிக்கும் வாக்குமூலம் இவ்வழக்கின் முக்கிய சாட்சியமாக கருதப்படும் என்பதால், மாணவியின் தோழிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சி.பி.சி.ஐ.டி. பொலிசார் முடிவு செய்து, அதற்கான ஒப்புதலை நீதிமன்றத்திடம் இருந்து பெற்றனர்.
அதன் அடிப்படையில், நேற்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் ஸ்ரீமதியின் தோழிகள் 2 பேர், அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி, சுமார் 2 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர். நீதிபதி புஷ்பராணி, இரு மாணவிகளின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துகொண்டார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வு அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.