கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நகைகள், இடங்கள், வரவு செலவு கணக்குகளை 6 பேர் கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அந்த கோவிலை நடத்தி வரும் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இதுதொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி, கோவலில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகிறது.
ஏற்கனவே ஆய்வுக்காக இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வுக்காக கோயிலுக்குச் சென்றபோது அவர்களுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர். இதையடுத்து, இந்து அறநிலையத் துறை நடராஜர் கோயில் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என்று செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மெயில் மூலமாகவும் நேரடியாகவும் சுமார் 5000 புகார்கள் இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுக்கு வரலாம் என தீட்சிதர்கள் அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், இன்று (ஆக.22) காலை 11 மணி அளவில் இந்து அறநிலையத் துறை திருவண்ணாமலை துணை ஆணையர் குமரேசன், கடலூர் துணை ஆணையர் ஜோதி, விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், திருச்சி நகை மதிப்பீட்டு வல்லுனர் தர்மராஜன், திருவண்ணாமலை நகை மதிப்பீட்டு குழு வல்லுனர் குமார், விழுப்புரம் நகை மதிப்பீட்டு குழு வல்லுனர் குருமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கோயிலுக்கு வந்தனர்.
தீட்சிதர்கள் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர். கோயிலுக்குள் சென்ற குழுவினர் நகை மற்றும் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.