சென்னை: மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள், மின்வர்த்தகத்தில் ஈடுபட தடை மத்திய அரசு தடை விதித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசு  விளக்கம் அளித்துள்ளது.

மின் வினியோக நிறுவனங்களுக்கு  தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தெலங்கானா ஆயிரத்து 380 கோடி ரூபாயும், தமிழ்நாடு 926 கோடி ரூபாயும் நிலுவை வைத்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அதைக் கடந்தும் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சாரம் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு மின்தடை ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு  விளக்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, “தற்போதைய நிலவரப்படி ரூ.70 கோடி மட்டுமே நிலுவையில் உள்ளது. நாளை ரூ.70 கோடியும் செலுத்தப்பட்ட பின், வழக்கமான நிலை தொடரும். பணம் செலுத்துவது தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் நிலுவைத் தொகை வந்துள்ளது. இன்றைய  நிலையில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நாளையே பணம் செலுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.5000 கோடி பாக்கி: தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை!