சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி இலவசம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாகவும் இனி இலவச திட்டங்கள் நிறுத்தப்படும் என்றும் பேசியிருந்தார்.

இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு மக்கள் நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தவே இவ்வாறு கூறியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இந்தியா டுடே தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம், ஏழ்மை நிலையை விரட்ட பிரதமர் மோடி முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு திமுக ஏன் தடையாக இருக்கிறது என்று கேட்கப்பட்டது.

இதற்கு, மத்திய அரசின் நிதி வருவாயில் பெரும் பங்கு தமிழகத்தில் இருந்து செல்கிறது, மத்திய அரசின் கருவூலத்திற்குச் செல்லும் ஒவ்வொரு ரூபாய்க்கும் எங்களுக்கு வெறும் 30 முதல் 33 பைசா தான் திரும்ப கிடைக்கிறது.

இதில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை அமல்படுத்தி நாட்டின் முன்னணி வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கும் நிலையில், எதற்காக தேர்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட எங்கள் கொள்கையை கைவிட்டு பிரதமர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இலவச திட்டங்களை கைவிட சொல்வதற்கு எந்த அரசியல் அமைப்பு அவருக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது ? அவர் என்ன பொருளாதார வல்லுநரா ? நோபல் பரிசு வாங்கியவரா ? அல்லது எங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளாரா ? எதற்காக நான் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் ?

எந்த அடிப்படையில் உங்களுக்காக எங்களது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும், இது என்ன சொர்க்கத்தில் இருந்து வந்த கூடுதல் அரசியலமைப்பா ?

நாட்டின் கடனை குறைத்துவிட்டாரா ? அல்லது தனிநபர் வருமானத்தை அதிகரித்தாரா ? அல்லது வேலைவாய்ப்பைத் தான் உருவாக்கினாரா ? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதோடு

எதற்காக நான் அவர் சொல்வதை ஏற்கவேண்டும், நான் கடவுளை நம்புகிறவன் அதற்காக தனி மனிதனை கடவுளாக நினைத்து அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்பவன் அல்ல என்று காட்டமாக பேசினார்.

தமிழக நிதி அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு ஏழை மக்களுக்கு வழங்கும் இலவசங்களை நிறுத்தச் சொல்லும் பிரதமர் நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு பல்லாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது எந்த கணக்கில் சேரும் ? சாமானிய இந்தியர்களுக்கு ஒரு நியாயம் பணக்காரர்களுக்கு ஒரு நியாயமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மக்கள் நல திட்டங்கள் மூலம் வழங்கப்படும் பொருட்களுக்கு இலவசம் என்ற முத்திரை கூடாது என்று ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அந்த மக்கள் நல திட்டங்களுக்கு மூடு விழா நடத்த பாஜக முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.