சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து,  எடப்பாடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். ஜூலை 11ந்தேதி பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது ரத்து செய்யப்படுவதாகவும்   தீர்ப்பளித்தார்.
சட்டத்தை மட்டுமே நம்பிக்கொண்டு காத்து இருந்த ஓபிஎஸ்க்கு இந்த தீர்ப்பு பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அவரது தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க, வெடி வெடித்தும் வெற்றியைக் கொண்டாடினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,  அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும். ஒன்றரை கோடி தொடர்களை அரவணைத்து செல்வேன் என கூறியதுடன், சசிகலா, டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுத்தார்.

நீதிமன்ற  தீர்ப்பு எடப்படி தரப்புக்க பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இபிஎஸ் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வளர்மதி உள்ளிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. மனுவில், அதிமுக பொதுக்குழு செல்லாது என தனிநீதிபதி அளித்த தீர்ப்பு தவறானது,  நீதிமன்றம் அனுமதியுடனேயே பொதுக்குழு கூட்டப்பட்டது என்றும்  சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. வரும் 22ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…