சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் , அலுவலக பூட்டு உடைப்பு, ஆவணங்கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இபிஎஸ் தரப்பு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில், தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அதிமுக பொதுக்குழு நடைபெற்ற ஜூலை 11ந்தேதி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து, அங்குள்ள ஆவணங்களை போலீசார் முன்னிலையில் ஒபிஎஸ் தரப்பினர் அள்ளிச் சென்றது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியானது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்த்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இபிஎஸ் தரப்பு சார்பில், சி.வி.சண்முகம் எம்.பி. ராயப்பேட்டை காவல்துறையில் புகார் கொடுத்தார். ஆனால், அதன்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், போலீசாரும் செயல்படுகின்றனர். ஆவணங்களை திருடிய சம்பவத்தை சிவில் பிரச்சினையாக கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சி.வி.சண்முகம் சார்பில் வக்கீல் ரியாஸ் முகமது ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, சி.வி. சண்முகம் கொடுத்த புகாரின் மீது பதிவான வழக்கின் நிலை அறிக்கையையும், இந்த மனுவுக்கு பதில் மனுவும் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! ஆவணங்களை அள்ளிச்சென்றார் ஓபிஎஸ்…