நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
நம்ம சென்னையில்தான் இந்த பயங்கரம்..
40 வயது பெண் இரவில் தன் நண்பருடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் காரை பயங்கர ஆயுதங்களுடன் வழி மறிக்கிறது.
காரை அருகில் இருந்த இடத்திற்கு ஓட்டிச் சென்று ஆண் நண்பரை கட்டிப்போட்டு விட்டு பெண்ணை ஒரு புதருக்குள் வைத்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்கிறது. இதற்குள் ஆண் நண்பர் எப்படியோ தப்பித்து தகவல் தெரிவிக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகிறார்கள்.
அவர்களை கண்டதும் பெண்ணிடமிருந்து 15 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு கும்பல் தப்பித்து ஓடுகிறது. அதில் ஒருவன் மட்டும் பிடிபட்டு விடுகிறான். அவனை வைத்து விசாரிக்க அடுத்தடுத்து ஐந்து பேர் சிக்குகின்றனர். ஆறு பேரில் இருவருக்கு வயது 19. மற்றவர்களுக்கு 20+.. அனைவருமே கடுமையான மது மற்றும் கஞ்சா போதையில் இருந்திருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிப்பதுடன் இன்னொரு பக்கம் உளவியல் ரீதியாக மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில் இருந்து அந்தப் பெண் மீண்டு வருவதற்குள் எவ்வளவு போராட்டத்தை மன ரீதியாக சந்திக்க வேண்டி இருக்குமோ தெரியவில்லை. கொடுமையிலும் கொடுமை..
பெண்ணின் கணவரும் குழந்தைகளும் திருவிழாவுக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் அந்த பெண்ணுக்கு நடந்திருக்கிறது.
மாநிலத்தின் தலைநகரான சென்னையின் தெள்ளியாரு அகரம் பகுதியில்தான் இந்த பயங்கரம் அரங்கேறியிருக்கிறது. வழிமறித்து கொள்ளை என்பதைத் தாண்டி சர்வசாதாரணமாக கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கிறது. எதிர்பாராத குற்றங்களை காவல்துறையால் தடுக்க முடியாது. ஆனால் குற்றவாளிகள் உருவாவதை கண்டிப்பாக காவல்துறையால் தடுக்கமுடியும்.
எந்தெந்த ஏரியாவில் யார் யாரெல்லாம் சமூக விரோதிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஆரம்பகட்ட தரவுகள் காவல்துறையிடம் இருக்கிறதா இல்லையா என்பதே புரியவில்லை. எந்த டிஜிபிக்கும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட புகழ் வெளிச்சத்தோடு நியமிக்கப்பட்டார் சைலேந்திரபாபு. ஆனால் எதிர்பார்ப்பு எல்லாமே சுக்கல் சுக்கலாய் நொறுங்கிக்கொண்டிருக்கிறது..
ஆலோசனைக் கூட்டங்களும் எச்சரிக்கைகளும் மட்டுமே பலனை தந்து விடாது.