சென்னை : மின் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு வரும் மின்சாரஒழுங்குமுறை ஆணையம் இன்று மாநில ஆலோசனை குழு கூட்டத்தை நடத்துகிறது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கருத்து கேட்பு முடிந்ததும், மின்கட்டணம் உயர்வு குறித்த முடிவுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயா்கிறது. வீட்டு உபயோகத்திற்கு ஏற்கெனவே வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியமும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 101 யூனிட் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று மின்வாரி ஆலோசனை குழுவுடன் ன்சாரஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. மின்சார ஆலோசனை குழு என்பது, மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரியம் கொள்முதல் செய்யும் மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஆலோசனைவழங்க, மாநில ஆலோசனைகுழு உள்ளது. அக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களாக, மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர், இரு உறுப்பினர்கள், கூட்டுறவு துறை செயலர்; உறுப்பினர்களாக எரிசக்தி துறை செயலர், மின் வாரிய தலைவர், பல துறைகளின்பிரநிதிகளின் என, 13 பேர் உள்ளனர்.
தற்போது மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தித் தர கோரிய மனுக்களை, மின் வாரியம் ஜூலை 18ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக ஆணையம், மாநில ஆலோசனை குழுவில் விவாதிப்பதுடன், பொது மக்களிடமும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த உள்ளது.அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் இன்று காலை, மாநில ஆலோசனை குழு கூட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்க, உறுப்பினர்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் நேற்றும், தொலைபேசி வாயிலாக அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மின் வாரியம் தாக்கல்செய்துள்ள மனுக்கள் தொடர்பாகவும், மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பது குறித்தும் ஆணையம், குழு உறுப்பினர்களுடன் ஆலோசிக்க உள்ளது