சென்னை: சென்னையில் சேதமடைந்த 1737 சாலைகள் மீண்டும் சீரமைக்கப்பட உள்ளதாகவம்,  பல இடங்களில் சாலைகளை தோண்டி எடுத்து மீண்டும் புதிய சாலை போடும் பணியும் நடந்து வருகின்றன மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் சாலையின் குறுக்கே ஏராளமானோர் பள்ளம் தோண்டி, குடிநீர், கழிவுநீர், மின்சார பணிகளுக்காக தன்னிச்சையாக  தங்களது பணிகளை நிறை வேற்றி உள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன.

இதையடுத்து, சென்னையில் சேதமடைந்த சாலைகள் கணக்கிடப்பட்டு, அதை செப்பனிடும் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  சென்னையின் பல்வேறு பகுதிகளில் 1737 சாலைகள் சேதம் அடைந்து இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக சேதமடைந்த 1000 சாலைகளை சீரமைக்க இந்த மாதத்தில் டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும்,  மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இதுவரையில் 1371 சாலைகளை பொறியாளர்கள்  ஆய்வு செய்து சேதமடைந்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளார்கள். தண்டையார்பேட்டை மண்டலத்தில் தான் அதிக அளவு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அங்கு 251 சாலைகளும், ஆலந்தூரில் 209 சாலைகளும், பெருங்குடியில் 186, அம்பத்தூர் 150, மாதவரம் 135, கோடம்பாக்கம் 129, அண்ணாநகர் 127, திரு.வி.க. நகர் 109, சோழிங்கநல்லூர் 97, தேனாம்பேட்டை 68, மணலி 68, அடையாறு 58, ராயபுரம் 56, திருவொற்றியூர் 51, வளசரவாக்கம் 43 சாலைகள் என மொத்தம் 257 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.169 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 405 சாலைகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கி விரைவில் தயாராகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.