சென்னை; பொறியியல் கலந்தாய்வு தேதியை மாற்றி தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், வரும் 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது.
தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திக்கேயன் உள்பட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அதில், பொறியியல் கலந்தாய்வு, அண்ணாமலை பல்கலை விவகாரம், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் கலந்தாய்வு 16ஆம் தேதிக்குப் பதிலாக ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது என்றவர், பொது கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறும் என்றார்.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 20 தொடங்கி 23 வரை நடைபெறும் என்றவர், தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.
நீட் தேர்வு முடிவு வெளியாகாத நிலையில், பொறியியல் கலந்தாய்வு தொடங்குவது தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கலந்தாய்வு தேதி 4 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.