சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட மூத்த காங்கிரசார், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, கேஸ் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. சென்னையில், பாஜ ஆட்சியை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஆளுநர் மாளிகை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலை அருகே ஏராளமான காங்கிரசார் திரண்டனர். அவர்களுடன் கேஎஸ்.அழகிரி உள்பட மூத்த தலைவர்கள், தொண்டர்களுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் இடைமறித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கேஎஸ்அழகிரி உள்பட 500க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். வாகனங்களில் ஏற்றி அருகில் இருந்த திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். இந்த போராட்டத்தால் சைதாப்பேட்டையில் பதற்றம் நிலவியது.
இந்த போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, நாசே ராமச்சந்திரன், துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், டில்லிபாபு, ரஞ்சன் குமார் மற்றும் நிர்வாகிகள், மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன், சுமதி அன்பரசு உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னன்ர செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, நம் கலாச்சாரம், இறை நம்பிக்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது; வட இந்தியாவில் செய்த முயற்சியை, தமிழ்நாட்டில் பாஜகவால் செய்ய முடியவில்லை என்று கூறினார்.