டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். இந்த பேரணியில்  கருப்பு உடையுடன் ராகுல்காந்தியும் கலந்துகொண்டார்.

உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை  கண்டித்தும்,  மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டியும்  காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவததோடு, ஆளுவர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்கின்றனர்.

இதையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஆனால், மாநில அரசு, போராட்டத்துக்கு தடை விதித்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், தடையை மீறி காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடையுடன் நாடாளுமன்றத்தில் இருந்து, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிடவும் ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர். இந்த போராட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேரணி தொடங்கியது. இந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல்காந்தியும் கலந்துகொண்டார்.

காங்கிரஸ் எம்.பி.க்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் டெல்லியின் பல இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Photo/Video Credit:  Thanks ANI

நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்த ராகுல்காந்தி – காங்கிரஸ் எம்.பி.க்கள் – வீடியோ